search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை பட்ஜெட்"

    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

    பட்ஜெட் கூட்டத்தை 27-ந்தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களான பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை சபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 19-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் சபையை ஒரு வாரம் முன்னதாக 19-ந்தேதியே முடித்தனர்.

    அதேநாளில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு தடையில்லை என்பதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என உத்தரவிட்டது.

    இதற்கிடையே யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட்டிற்கு கவர்னரின் ஒப்புதல் பெற்று சபையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கவர்னர் பட்ஜெட் நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாமலேயே சபையை சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு பென்‌ஷன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அரசே முடங்கும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் பட்ஜெட்டிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    இன்று மின்துறை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-


    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் செயல்படவும் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளேன்.

    இதற்கான கோப்பு கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது. 26-ந்தேதி வரை சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவிற்கு அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryAssembly #Kiranbedi
    நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். #puducherryassembly

    புதுச்சேரி:

    இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் காலவரையின்றி சபையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துறைரீதியான நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒட்டுமொத்த நிதி ஒதுக்க மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தோம்.

    ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். அரசு கொடுத்த பணிகளை நான் முடித்துவிட்டேன். நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #puducherryassembly

    புதுவை சுகாதாரத்துறையில் குரூப் ஏ 108, பி மற்றும் சி 216, டி பிரிவில் 318 பதவிகள் என மொத்தம் 642 பதவிகள் காலியாக உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    ஜெயமூர்த்தி:- அரசு பொதுமருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி எவ்வளவு மதிப்பீட்டில் எப்போது வாங்கப்பட்டது?

    தற்போது எவ்வளவு காலமாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்படவில்லை? இதை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சுகாதாரத்துறையில் முதுநிலை மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை எந்தெந்த பதவி எவ்வளவு காலியாக உள்ளது? இதை நிரப்ப அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    முதல்- அமைச்சர் நாராயணசாமி: அரசு மருத்துவமனைக்கு 2001-ம் ஆண்டு ரூ.5 கோடியே 37 லட்சம் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வாங்கப்பட்டது. இதை பராமரிக்க தனியார் நிறுவனத்தோடு 2007-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயங்கவில்லை.

    ஸ்கேன் வழங்கிய நிறுவனத்தை பழுதுநீக்கவும், செயல்படுத்தவும் அழைத்தோம். அவர்கள் பழுதிற்கு அப்பாற்பட்டது என சான்றளித்து விட்டனர். சுகாதாரத்துறையில் குரூப் ஏ 108, பி மற்றும் சி 216, டி பிரிவில் 318 பதவிகள் என மொத்தம் 642 பதவிகள் காலியாக உள்ளது.

    மத்திய தேர்வாணையம் மூலமாக காலி மருத்துவ பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப் பினும் அனைத்து காலி பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு மருத்துவ அதிகாரிகளால் நிரப்பப்பட்டு வருகிறது.

    குரூப் பி, சி, டி காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்கேன் எந்திரம் பழுதடைந்துள்ளதால் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து வருகின்றனர்.

    ஆண்டுக்கு ரூ.25 லட்சம் இதற்காக செலவாகிறது. தனியார் பங்களிப்புடன் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறப்பதாக சட்டசபையில் இன்று நடைபெற்ற கேள்விநேரத்தின் போது முதலமைச்சர் நாராயணசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    வையாபுரிமணிகண்டன்:- புதுவை மாநிலத்தில் புற்றுநோயினால் பொது மக்களின் இறப்பு அதி ரிப்பது அரசுக்கு தெரியுமா? சுகாதாரத்துறை இதை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கை என்ன?

    முதல்-அமைச்சர் நாராயணசாமி:- புதுவை அரசு புற்று நோய் சிகிச்சைக்காக இலவச பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகளை அரசு மருத்துவமனை வாயிலாக வழங்குகிறது. ஜிப்மரில் பிராந்திய புற்று நோய் மையத்தின் ஆதரவோடு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

    மேலும் தேசிய திட்டத்தின் கீழ் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க முகாம்கள் நடத்தி வருவதால் ஆரம்ப சிகிச்சை தொடங்கவும், இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழி செய்துள்ளோம். பிராந்திய மருத்துவமனைகளில் பிரத்யேக பராமரிப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது.

    அன்பழகன்:- புற்று நோயால் புதுவையில் அதிகளவில் இறப்பு நிகழ்கிறது. அனுமதி பெறாமல் நகர பகுதி முழுவதும் செல்போன் டவர் அமைத்துள்ளதே புற்றுநோய் அதிகரிக்க காரணம். இதன் அலைவரிசையை கணக்கிடக்கூட நம்மிடம் கருவிகள் இல்லை. செல்போன் டவர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செல்வம்:- பெண்கள் தான் அதிகளவில் புற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியவில்லை. இதனால் நோய் அதிகளவில் பரவி இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரியிலேயே தனி பிரிவு உருவாக்க வேண்டும்.


    ஜெயமூர்த்தி:- பொது மக்களிடம் நாள்தோறும் பழகுகிறோம். பல இறப்புகளுக்கு செல்கிறோம். அப்போது பலர் புற்று நோயால் இறந்ததாக கூறுகின்றனர். இதற்கு சிகிச்சை பெற கால தாமதம் ஏற்படுவதே இறப்பிற்கு காரணம்.

    நாராயணசாமி: புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறக்கின்றனர். ஜிப்மரில் தனி பிரிவு இயங்குவதால் மத்திய அரசு, அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்கு தனி பிரிவு உருவாக்க அனுமதி அளிப்பதில்லை. இருப்பினும் புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான பிரிவை உருவாக்குவோம். புற்று நோய் சிகிச்சை மையம் உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #Narayanasamy #Cancer
    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பகுதிகளில் கூடுதலாக மின் கட்டண உபயோகத்தை காட்டுவதை கண்டித்து புதுவை சட்டசபையில் மின்சார மீட்டரை உடைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மின்துறை சார்பில் நகர பகுதியில் ஸ்மார்ட் மீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் இருந்து 34 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் ரூ.44 கோடி செலவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் நகர பகுதியில் உருளையன் பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தியுள்ளனர்.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பகுதிகளில் கூடுதலாக மின் கட்டண உபயோகத்தை காட்டுகிறது. இதனால் மின் கட்டணம் 2 மடங்கு கூடுதலாக வருகிறது என புகார்கள் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், தி.மு.க. உறுப்பினர் சிவா ஆகியோர் பேசினர். ஸ்மார்ட் மீட்டரால் வரும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்மார்ட் மீட்டரை திரும்பப்பெற வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் அரசு ஸ்மார்ட் மீட்டரை திரும்பப் பெறும் எண்ணத்தில் இல்லை. இதனால் இதை கண்டித்து புதுவை சட்டசபை வளாகத்தில் மையமண்டபத்துக்கு செல்லும் படிகட்டுக்கு முன்பு இன்று காலை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஸ்மார்ட் மீட்டர்களை உடைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் மீட்டரை தரையில் வீசி உடைத்தனர். பின்னர் வழக்கம் போல சபை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
    புதுவை மாநில பட்ஜெட்டுக்கு திங்கட்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லியில் முகாமிட்டு இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நள்ளிரவு புதுவை திரும்பினார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் மத்திய உள்துறை இணை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேசினேன்.

    அப்போது அவர் மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின் கீழ் நிதி அளிப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கங்ளை அளித்தேன். மேலும், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றியே பட்ஜெட் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பியது குறித்தும் தெரிவித்தேன். உள்துறை இணை செயலாளர் புதியவர் என்பதால் இந்த விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

    அநேகமாக வருகிற திங்கட்கிழமை மத்திய அரசின் ஒப்புதல் பட்ஜெட்டுக்கு கிடைக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Congress #Narayanasamy
    பட்ஜெட்டுக்கு அனுமதி பெறாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியது சட்டமன்ற நடைமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அன்பழகன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரியாதைகளையும், ஜனநாயக நடை முறைகளையும் போட்டி போட்டுக்கொண்டு ஆளும் காங்கிரஸ் அரசும், கவர்னரும் காலில் போட்டு மிதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்ஜெட்டுக்கு அனுமதி பெறாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியது சட்டமன்ற நடைமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்காக காரணமின்றி சட்டமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைத்ததையும் அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    கவர்னர், முதல்-அமைச்சர் தொடர் மோதலால் புதுவை அரசின் நிர்வாகத்தை முடக்கம் செய்ய சதியாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் கவர்னர் மீதே ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சட்டமன்றத்தை கவர்னர் முடக்கம் செய்வது பலிக்காது என பேசியுள்ளார்.

    பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்காததற்கு தலைமை செயலாளரும், நிதி செயலாளரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு கவர்னர் விளக்கம் தர வேண்டும்.

    புதுவை மாநிலத்தின் வரி சலுகையை பயன்படுத்தி சில வியாபாரிகள் மாநிலத்தை கடத்தல் மாநிலமாக மாற்றியுள்ளனர். மது, பெட்ரோல், டீசல், சிகரெட், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு குடோன் அமைத்து தமிழகத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் புதுவை கடத்தல் மாநிலமாக மாறியுள்ளது.

    இதனால் புதுவை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒவ்வொரு ஆட்சியிலும் அவர்களுக்கு வேண்டியவர்கள் இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர். தற்போது மணல் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. கடத்தி கொண்டுவரப்படும் மணலை அனுமதிக்கும் வகையில் அமைச்சர் சட்டமன்றத்தில் பேசினார். இது அமைச்சர் பதவிக்குரிய மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

    மத்திய அரசின் சட்டப்படி மணலை குடோவுனில் வைத்திருப்பதும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் சட்டப்படி குற்றம். புதுவையில் உள்ள சட்டப்படியும் மணலை எடுத்து வருவது குற்றமாகும். அப்படியிருக்க தமிழகத்திலிருந்து கடத்தி கொண்டுவரும் மணலை அரசு அதிகாரிகள் சட்டப்படிதான் பிடிக்கின்றனர். இந்த பிரச்சினையை சட்டரீதியாக தீர்க்க அரசு முன்வர வேண்டும். ஆனால் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்படக் கூடாது.

    புதுவை மணல் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசோடு சுமூக போக்கை கடைபிடிக்க வேண்டும். அதைவிடுத்து மோதல் போக்கை கடைபிடித்துக் கொண்டு சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை நாராயணசாமி தெரிவித்தார். அவர் தென்மாநில மாநாட்டில் பங்கேற்றபோது மணல் பிரச்சினை பற்றி தமிழக அமைச்சரோடு பேசியதாக கூறினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சராக இருந்தாரா? தமிழகத்தை உரிய முறையில் அணுகி மணல் பிரச்சினையை தீர்க்க வழி காண வேண்டும். வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப் போவதாக நாராயணசாமி கூறியுள்ளார். இதற்கு கவர்னர் அனுமதி தருவாரா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் துறைமுகம் செயல்படவே கவர்னர் அனுமதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×